எது ஆடை சுதந்திரம் ?

எது ஆடை சுதந்திரம்...!??

டாக்டர் ஜான்சி பால்ராஜ்


     நமது சுதந்திரம் மற்றவர்களது சுதந்திரத்தை முடக்குவதாக இருத்தல் கூடாது. ஆண் பெண் என்ற இருபாலருக்கும் சுதந்திரம் பொதுவானது. எக்காரணம் கொண்டும் ஒருவரது சுதந்திரம் பிறருடைய வாழ்வை ,மனதை பாதிப்பதாக இருக்கும் பட்சத்தில் அச்சுதந்திரத்தை, நாம் ஒவ்வாத ஒன்றை ஒதுக்குவதைப்  போல ஒதுக்கிவிட வேண்டும்.அது தான் அறிவு முதிர்ச்சி.

    இன்று ஆடையணிதலில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் சுதந்திரத்தின் அடையாளமாக சமூகத்தால் அங்கீகரிக்கப் படுகிறது. அதற்காக ஆண்டு தோறும் ஆடைகளுக்காக மக்கள் செலவிடும் தொகை அளவற்றது.

     ஆடை பாதி ,ஆள் பாதி என்பதும் உண்மை. ஒருவரது தோற்றத்தை அழகாக்கி  தன்னம்பிக்கை ஏற்படுத்தும் உளவியல் மாற்றத்தை உடைகள் ஏற்படுத்துகின்றன. 

      ஆனால் பெண்களைப் பொறுத்தவரை,மிகவும் குறைந்த விழுக்காட்டினரின் ஆடையணிதலில் ஏற்பட்டிருக்கும் சுதந்திரம் என்பது பெண்ணினத்தின் முன்னேற்றத்திற்கான  அளவுகோலாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. 

  ஆடைச்சுதந்திரம் ஒரு பாதையில் ஆண்களின் இன ஈர்ப்பைத் திருப்திப்படுத்திப் பெண்ணின் மீதான போலியான மதிப்பை உண்டாக்குவதாகவே தெரிகிறது. இதில் பெண்கள் மிகக் கவனமாக செயல்பட்டால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும்.அல்லது சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் காட்டும் அதிநவீன போக்குகள் ஆண்களின் பார்வைக்கும் விருப்பத்திற்கும் தீனியாகவே ஆண்களால் ஏற்கப்படும்.


     பெண்களின் ஆடையணிதல் பற்றின நிலைப்பாடு நாட்டிற்கு நாடு ,சமூகத்திற்குச் சமூகம் மாறுபடுகிறது. சில மேலைநாடுகளில்  பெண்கள் அணியும் ஆடைகளைப் போல் இந்தியாவில் நாமும் அணிந்தால் என்ன? என்ற கேள்வி எழலாம். ஆனால்  அந்த நாட்டினரின் வாழ்வியல் முறைகளும் இயற்கைச் சூழலும், மக்களின் உளவியல் நிலைப்பாடுகளும் நமது நாட்டினருக்கு ஒத்துப் போகாதென்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். 

     பெண்கள் தங்கள் அழகை மேலும் அழகாக்கும் வகையிலும் தங்களுக்கு அணிவதற்கு ஏற்ற வகையினதுமான ஆடைகளை அணிவது தவறில்லை. 

      ஆனால் 

      அங்கம் தெரியும் அளவில் ஆடை அணிவதும், திரைப்படங்களில் நடிகைகள் சில நிமிடங்கள் அணிவதைப் போன்ற ஆடைகளை அணிந்து சாலைகளில், பொது பேரூந்துகளில் வலம் வருவதும்தான் பெண் சுதந்திரம் என்ற எண்ணப் போக்கு மிகவும் ஆபத்தானது. 

   இன்னும் சொல்லப் போனால் ஆண்களின் இச்சையைத் தூண்டும் ( முறையற்றப் பாலுணர்வு)பார்வைக்கு பெண்களுள் சிலர் அடிமைப்பட்டுக் கிடப்பதையே இது காட்டுகிறது. எந்தவிதமான அடிமைத்தனத்திலும் சுதந்திரம் என்பது இருக்கவே முடியாது.

      மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கூறும் போது ,பெண்களின் மறைவிடங்கள் ஆடைக்கு மேல் தெரிவதும் கூட ஆண்களின் பாலுணர்வைத் தூண்டும், ஆனால் ஒரு ஆணை முழு நிர்வாணமாகப் பார்க்க நேர்ந்தாலும் ஒரு பெண் சலனமடைவதில்லை, இது இயற்கையாகவே ஆண், பெண் மூளையின் வேறுபாடு என்கிறார். ஆம் இது நமது அனுபவத்தில் கூட உண்மை தான்.

      எனவே பெண்கள் பொது இடங்களில் செல்லும் போது ஆண்களின் பாலுணர்வைத் தூண்டும் வகையில் ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். 

     அத்தகைய ஆடைகளை அணிவதால் எந்தவித மரியாதையோ அதீத அழகோ தெரியப் போவதில்லை என்ற உண்மையை உணராதவரை இதை செயல்படுத்துவது கடினம்.

       ஒருமுறை ஒரு திரைப்பட நடிகை  ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார், " நான் திரைப்பட கதாபாத்திரத்திற்கு ஏற்ற விதத்தில் அவர்கள் தரும் ஒரு( அரைக்குறை)  ஆடையை அணிகிறேன். ஆனால் அந்தக் காட்சி முடிந்த பிறகு நான் ஒருபோது அதை அணிவதில்லை. நமது சமூகத்தில் அந்த ஆடையை நடைமுறையில் அணிந்து செல்வது  அநாகரீகமாகவே நான் கருதுகிறேன்" ஆனால் அந்தப் படத்தைப்பார்ப்பவர்கள் அதைப் பின்பற்றினால் நான் என்ன செய்வது? அது என் தவறு அல்ல .என்று வெளிப்படையாகக் கூறினாள். 

       இந்த உண்மையைக் கூட தெரியாமல் ஆடை சுதந்திரம் தான் பெண்விடுதலையின் குறியீடாகக் கருதுவதும் அதன் வெளிப்பாடாக உடலின் மிக குறைந்த பகுதியை மட்டுமே மறைக்கும் ஆடைகளை அணிய விரும்புவதையும் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

        ஊடகங்களிலும் அறைகுறை ஆடையணிந்த பெண்களது புகைப்படங்களைக் காட்டுவதை, பெண்களை இழிவுப் படுத்தும் செயலென்ற உணர்வை பெற வேண்டும் . அப்போது தான் சீரான முரண்பாடுகளற்ற பாலின சமத்துவம் உண்டாகும்.

                                                                    ------------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News